செவ்வாய், 20 ஏப்ரல், 2010

வாக்கு........?

நம் பாரத நாடு பெரும்பான்மையான பாமர மக்கள் வாழும் ஜனநாயக(....?)நாடு. வாக்கு பாமர மக்களின் கையில் உள்ள பேராயுதம். ஆனால் வாக்கின் தற்போதைய நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. குடம், மூக்குத்தி,பரிசுப்பொருட்கள் தந்து வாக்கு சேகரிப்பதாக முன்பொரு காலத்தில் கேள்வி பட்டுள்ளேன், சில இடங்களில் மிக ரகசியமான முறையில் நடைபெற்றதையும் அறிந்துள்ளேன். தற்போது மிக சுதந்திரமாக கட்சி வித்தியாசம் இன்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக(.....?) வீட்டு வாசலிலே கட்சிகளிடம் பணம் வாங்கும் மக்களை என்னவென்று சொல்லுவது...?. நவீனத்தின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியாகத்தான் இதை பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. எந்த காலத்திலும் மாறாத, மாற்ற முடியாத சக்தியாக கிராம மக்களை எண்ணி கொண்டும், இன்றுவரை நம்பிக்கொண்டும் இருப்பவன் நான். கிராமங்களில் கூட கை நீட்டி காசு வாங்கும் நிலையை நினைத்து வெட்கமாக உள்ளது. எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இந்தியாவின் முதுகெலும்பாக கிராமங்களை காந்தி சொல்லி இருப்பார், இன்று அவர் இருந்தால் தனது கருத்தை மறு பரிசீலனை செய்யகூடும். ஏன் இந்த மாற்றம் கிராமங்கள் யாவும் சிறிய நகரங்களாகப்போனதால் மக்களின் தரம் தாழ்ந்து விட்டதா....?. வேப்ப மரத்தடியிலேயும், முளைக்கட்டு திண்ணையிலும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு இருந்த மக்கள் தொலைகாட்சி பெட்டியுனுள் தஞ்சமடைந்ததால் மக்களின் மூளை மழுங்கிவிட்டதா...?. வாக்கிற்கு பணம் வாங்கினால் ஏற்ப்படும் விபரீதங்களை மக்கள் எப்படி அறியாதவர்களாக உள்ளார்கள்........? கட்சிகளுக்குள் மட்டுமே இருந்த இந்த வாக்கிற்கு பணம் வாங்கும் இந்த ஒழுக்க கேடு சகலரிடமும் எப்படி பரவியது......?. வாக்கிற்கு பணம் வாங்கும் விசயத்தில் மட்டும் பல்லிளித்து கொண்டு பணம் வாங்கும் தேவையற்ற சமத்துவம் எப்படி வந்தது....?. இனி இந்தியாவின் முதுகெலும்பை நகர மக்களை பார்க்காத காட்டில் வசிப்பவர்களிடம்தான் தேட வேண்டுமோ தெரியவில்லை கேடுகெட்ட அரசியல்வாதிகளிடம் அனைத்தையும் இழந்துவிட்டோம். இனி உயிரையும் அதற்க்கு முன்னதாக தன்மானத்தையும் இழந்துகொண்டு இருப்பதை நினைத்தால் வேதனையில் விம்முகிறது நெஞ்சு. பணத்திற்கு உடம்பை விற்பதும்,வாக்கை விற்பதும் ஒன்றாகவே பார்க்கப்பட்டால், இனிமேலாவது வாக்கிற்கு பணம் வாங்கும் வழக்கம் குறையும். வாக்கிற்கு பணம் வாங்கும் வழக்கத்தை இல்லாதொழித்து அரசியல் வேசைதனத்திர்க்கு முற்றுப்புள்ளி வைப்போம். வரும் சந்ததியர்க்கு புதிதாக எதுவும் செய்ய தேவை இல்லை. இருப்பதை கெடுக்காமல் இருக்க முயற்சி செய்வோம். நன்றி.வாழ்க பாரதம்.

வியாழன், 15 ஏப்ரல், 2010

மழையோடு... மழையாகி........

காலையில் குளியலறையின் மேற்கூரை(தகரம்) மெதுவாக தடதடத்தது,அனிச்சையாக மேல் நோக்கினேன், கூரை ஓட்டை வழியாக மழை நீரின் முதல் துளி என் நெற்றியில் வந்தமர்ந்தது. அது மழைத்துளிதான் என்பதை அறியும் முன்பே அதன் தொடுதலை உணர்ந்தவனாக இருந்தேன்.மழையின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து தகரத்தின் தடதடப்பும்,சந்தோசத்தில் என் இதய துடி துடிப்பும் அதிகரித்தன.வாளியில் அள்ளி குளிப்பதா, இல்லை மழைநீரின் செயற்கை தண்ணீர் பூத்திவலையில்(தகரத்தில் ஓட்டை அதிகம்) நனைவதா என்ற குழப்பத்தின் ஊடே ஒருவழியா குளித்து சிறிது மழை நீருடன் அறைக்குள் வந்து உடை மாற்றிக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன்.வாகனத்தில் ஏறிய உடன் எனது பக்க கண்ணாடியை முழுவதுமாக இறக்கி விட்டேன். என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சக நண்பர் என்னை ஒரு மாதிரியாக இல்லை பல மாதிரியாகவும் பார்த்தார் காரணம் வெளியே மழை வேகமாக பெய்துகொண்டு இருந்தது. மழைத்துளி என்னையும், சாரல் அவரையும் நனைத்து கொண்டிருக்கும் போதே சீரான வேகத்தில் வாகனத்தை இயக்கதொடங்கினேன். மழை இல்லாத நேரங்களில் என் வாகனம் போகும் வேகம் நண்பருக்கு தெரியும் மழையின் காரணமாக நான் மேதுவாகசெல்வதாக அவர் நினைத்து கொண்டிருப்பார். உண்மையில் மழையின் மீது எனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக, மழையை ரசித்து அனுபவிக்கும் நோக்கில் மெதுவாக சென்று கொண்டிருந்தேன். வாகனத்தின் வேகத்திற்கு தகுந்தார்ப்போல் மழைத்துளி என்னையும், சாரல் நண்பரையும் நனைத்து கொண்டு இருந்தது.(என்னை வெட்டி தந்தாள் கூட சாப்பிடும் அளவு கடுப்பு நண்பரின் முகத்தில் தெரிந்தது). என்ன செய்வது சில நேரங்களில் சுய நலவாதியாகத்தான் உள்ளேன். வாகனம் முன்னோக்கியும் நினைவுகள் பின்னோக்கியும் பயனமாகத்தொடங்கின. சிறு வயதுகளில் எல்லோரையும் போல மழையில் நனைவதும் பின்விளைவுகலாக சளிப்பிடிப்பதும்,வீட்டில் வெளுப்பதும்(துணியை இல்லை என்னைத்தான்) நடை பெரும்.மழையை வேறொரு முகவரியில் எனக்கு அறிமுகம் செய்தவர் எங்கள் எல்லோராலும் செல்லமாக மாஸ்டர்(தட்டச்சு பயிலகம் வைத்து இருந்தார்) என்று அழைக்க பட்ட மன்னாதி மன்னன்(உண்மையான பெயர்தான்)ஆவார். இவரைப்பற்றி விளக்கமாக வேறொரு பதிவில் கூறுகிறேன்(ஏன்னா அவ்வளவு விஷயம் இருக்கு). சில காலம் அண்ணனின் இரும்பு பட்டறையில் வேலை செய்தேன். அண்ணனின் நண்பராக எனக்கு அறிமுகமானார்.எந்த விசயத்தையும் அவர் பார்க்கும் கோணத்தில் மற்றவர்கள் பார்க்காததால் எங்கள் எல்லோராளையும் ஒரு மாதிரியாகவே பார்க்கப்பட்டார். மழை காலங்களில் அவர் சில நேரம் மிதிவண்டியில் நனைந்து கொண்டே பட்டறையை கடந்து போவதை பார்த்தது உண்டு.ஒரு நாள் ஏதோ உந்துதலில் நானும் மிதிவண்டியை எடுத்துகொண்டு அவரை பின்தொடர்ந்தேன். நான் பின் தொடர்வதை உணர்ந்தவராக மிதி வண்டியின் வேகத்தை குறைத்து எனக்கு இணையாக பயணம் செய்தார்.ஏன் வந்தாய், எங்குபோகிறாய் எதுவும் அவர் கேட்கவில்லை, நான்தான் மெதுவாக மாஸ்டர் இந்த மழையில் எங்கு போகிறீர்கள் என வினவினேன். பதில் கூறாமல் சிறு புன்முறுவலுடன் தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமாக இருந்தார்.நல்லா சிக்கிட்டமோ என உள் மனது புலம்புவது வெளியவே கேட்கும் போல் இருந்தது காரணம் கடுமையான குளிர் காரணமாக கை,கால் என தனியாக கூற விரும்பவில்லை உடம்பில் அணு அளவும் மிச்சம் இல்லாமல் அனைத்துமே உதறிக்கொண்டு இருந்தது. மாஸ்டரை பார்த்தேன் என்னை விட கொஞ்சம் ஒல்லிதான் இருந்தாலும் குளிரின் பாதிப்பு எந்த கோணத்திலும் கண்டுபிடிக்க முடியாமல் தான் இருந்தது. அடக்க முடியாமல் மாஸ்டரிடம் மழையின் பாதிப்பு உங்களுக்கு மட்டும் ஏன் இல்லை என்றதற்கு அவர் சொன்ன பதில்தான் மழையோடு மழையாதல். நான் அவரை பார்த்த பார்வையை புரிந்தவராக இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் பதில் தருகிறேன் என்றுவிட்டு பயணத்தை தொடர்ந்தார். பேசாம திரும்பி விடலாமா என்று யோசித்த போதே உள் மனது குளிரின் ஆனந்தத்தை அனுபவிக்க பழகி கொண்டிருந்ததை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. மலை பிரதேசம் என்பதால் ஆங்காங்கே சிறிய, பெரிய பாறைகள் காணப்படும், மொட்டைப்பாறைகள் என்றும் அழைக்கப்படும் நல்ல ஒரு மொட்டை பாறையை தேர்ந்தெடுத்து மிதிவண்டியை ஓரமாக்கினார் கூடவே நானும் மிதிவண்டியை நிறுத்தினேன். நல்ல ஒரு மொட்டைப்பாறையில் இருவரும் அமர்ந்து கொண்டோம். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கும் நான் நனைய ஆரம்பித்து தற்போது குளிரின் அளவு குறைந்து விட்டதை என்னால் நம்ப முடியவில்லை. மாஸ்டர் சொன்னார் எந்த ஒரு விசயமும் மனதுக்கு பிடித்து விட்டால் குறைகள் கண்ணுக்கு தெரியாது. மழையில் நனையாமல், மழையோடு மழையானால் அந்த ஏகாந்த பொழுதில் எதுவும் நம்மை பாதிக்காது என்றார். மாஸ்டர் சொன்னதை ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையைத்தான் அப்போது நான் பெற்று இருந்தேன்.அதாவது நானும் மழையோடு ..மழையாகித்தான் போனேன்.

திங்கள், 12 ஏப்ரல், 2010

மெய்ப்பொருள் காண்பதறிவு.

சமீப காலமாக, ஏன் நெடுங்காலம் என்றே சொல்லலாம். சாமியார்கள் பற்றிய செய்திகளும் அதைத்தொடர்ந்த விவாதங்கள் பற்றி தெரிந்ததை எழுத தோன்றிய பொது மூன்று நாட்களாக தலைப்பே கிடைக்காமல் திணறிய பொது வள்ளுவர்தான் துணையாக வந்தார்.முதலில் தனிப்பட்ட ஒரு மதத்துக்கு உரிய தனிப்பட்ட ஒரு பிரச்சினையாக பார்க்காமல் பொதுவான பிரச்சினையாகவே இதை பார்ப்போம். ஏன் என்றால் எல்ல மதத்திலும் நம்பியவர்களை இறை பயத்தை காட்டி தங்களின் சுய விருப்பங்களை நிறைவேற்றி கொள்ளும் கூட்டம் இருந்து கொண்டுதான் உள்ளது. ஏன் இவர்களிடம் மட்டும் படித்த,படிக்காத என்ற பேதம் இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக ஏமாறுகிறார்கள்..? யோசித்து பார்த்ததில் இவ்வாறு ஏமாறுபவர்கள் ஒழுங்கான இறை நம்பிக்கை அற்றவர்கலாவே இருக்க கூடும். நவீனத்துவம் என்ற பெயரில் புதுமையை விரும்பும் ,நம் மக்களின் மனதின் வேட்கையை சரியாக புரிந்துகொண்டு, அவர்களை விட சற்று அதிகமாக சிந்தித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏலம் போட்டு ஆன்மிகம் என்ற பெயரில் கூவி, கூவி விற்கிறார்கள். படித்தவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? அவர்களும் தாங்கள் அதி மேதாவி என்று வேறுபடுத்திக்காட்ட இந்த சாமியார்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள், உண்மையில் இவர்களின் இந்த எண்ணத்தை சாமியார்கள் பயன்படுத்திகொள்கிறார்கள். சாமியார்களிடம் சரணடைந்த கூமுட்டைகளுக்கு பாதியிலேயே சாமியார்களின் சுயரூபம் தெரிந்தாலும், அதிமேதாவி என போட்டுக்கொண்ட முகமூடி கிழிந்து விடும் என்ற பயத்தில் தாங்கள் ஏமாற்ற பட்டதை வெளியில் கூறுவதும் இல்லை. இந்த விசயத்தில் யார் மீது தவறு....? எங்கு ஆரம்பிக்கிறது..? ஆன்மீகத்திலா, இல்லை (ஆ)சாமிகளிடமா..?, இல்லை ம(மா)க்களிடமா?. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எமாற்றுபவருக்கு அது ஒரு தொழில், தனது வாடிக்கையாளராக ம(மா)க்களை பயன்படுத்துகிறான். பொருள் சரியில்லை என்றால்,காய்கறி விற்பவரிடம் கட்டும் கோபத்தை இந்த ஆன்மீக வியாபாரிகளிடம் காட்டினால் போதும், இதுமாதிரி விஷயங்கள் வரும் காலத்தில் குறையும் எனபது என் நம்பிக்கை.

சனி, 10 ஏப்ரல், 2010

வாகனம் மீட்டுதல்......!

நடை பழகும் முன்பே எனக்கு வாகனம் மீட்ட தெரியும் என்றால் நீங்கள் சிரிக்க கூடும். இதற்கான பதிலை கேலியாக கூற வேண்டும் என்றால், தாயின் கருவறையில் வாகனம் ஓட்டுவதற்கான ஆயத்த பயிற்சிகளில் ஈடுபாட்டிருந்தேன் என கூறலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், நடை பழகுவர்க்காக நான் மீட்டிய மூன்று சக்கர மரவண்டியைத்தான் சொன்னேன்.இதில் இருந்தே அனைவருக்குமே வாகனம் மீட்டுவதில் உள்ள ஆர்வம் புரிந்து இருக்கும், எனக்கு கொஞ்சம் அதிகம் என நினைக்கிறேன். மரவண்டிக்கு பிறகு பனங்காய் வண்டியில் என் பயணம் தொடர்ந்தது. பிறகு மிதி வண்டியின் சக்கரத்தை கொண்டு ஊரில் உள்ள அத்தனை தெருவும் அளவெடுக்கப்பட்டன. கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்கு கயிறாக பயன்படுத்த , பெரிய வாகனங்களின் பழைய சக்கரங்கள் வார், வாராக வெட்டப்படும், இறுதியில் மிஞ்சும் உள் வளையத்தை, வெட்டுபவரிடம் கெஞ்சி அதை மீட்ட தொடங்கினேன், நண்பர்களையிடையே போட்டி கூட நடைபெறும் சில முறை வெற்றியும் பெற்றுள்ளேன், பரிசாக கிடைத்த கள்ளச்சை(கடலை அச்சு), மூன்று நாட்கள் கூட தின்னாமல் பார்த்து ரசித்து உள்ளேன்(சிலநேரம் காணாமலும் போய் விடுவது உண்டு யாரிடம் கேட்டாலும் எலி தின்றுவிட்டதாக ஒரே பதிலையே கூறுவார்கள் இதுவரை அந்த எலியை கண்டுபிடிக்க முடியவில்லை). எனக்கு என் அப்பாவை நிறைய பிடிக்கும்(அடிக்கும் போதும்,திட்டுபோதும் தவிர்த்த மற்ற நேரங்களில்மட்டும்), அவரை விட அவர் வைத்து இருந்த ஹெர்குலிஸ் மிதிவண்டியின் மீது பயங்கர ஆசை. அப்பா சொல்லாமலே அதற்கு எண்ணெய் விடுவது துடைப்பது என அதை சுற்றி சுற்றி வருவேன். மிதி வண்டியை நிறுத்தியில்(stand ) உள்ளபோது இயக்குவது ரொம்ப பிடிக்கும் பல முறை கீழே விழுந்து மிதி வண்டியிடமும்,அப்பாவிடமும் அடிவாங்கி உள்ளேன். கொஞ்சம் வளர்ந்ததும் மெதுவாக மிதி வண்டியை உருட்ட கற்று கொண்டேன். பிறகு கால் மிதியில்(பெடல்) நின்றுகொண்டு பயணம் செய்தேன். பிறகு எல்லோராலும் குரங்குபெடல்(குரங்கு எப்ப மிதி வண்டி ஒட்டிச்சுனு தெரியல)என்று அன்போடு அழைக்கப்படும் வித்தையை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு ஆனந்தமாக மிதிவண்டி மீட்டிகொண்டு இருந்தேன். மூன்றாவது நாளே விழுந்து தடை(பிரேக்)கம்பி கன்னத்தில் குத்தி வீரத்தளும்புடன் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் என் மேல் இருந்த பாசத்தின் காரணமாக மிதிவண்டியை தொடுவதற்கு மொத்த குடும்பமே ஒருமித்து(இதுல மட்டும் ரொம்ப ஒற்றுமையா இருப்பாய்ங்க) தடை விதித்தனர்.இது எனக்கு கன்னத்தில் கம்பி குத்தியதை விட வலித்தது. இருந்தாலும் என் வாகனம் மீட்டும் ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. சின்ன மிதி வண்டிகளை வாடகைக்கு குடுக்கும் கடைக்கு சென்றேன்(வீட்டில் சுட்ட காசோடுதான்) கடைக்காரருக்கு எனக்கு மிதி வண்டி ஒழுங்காக மீட்ட தெரியாது என்பது அவருக்கு எப்படி தெரியும் என்பது எனக்கு தெரியாது, மிதிவண்டி தரமுடியாது என விரட்டிவிட்டார் .விதியை நொந்தபடி வீடு வந்தேன். இவ்வளவு அவமானப்பட்டும்(.....?) இந்த வாகனம் மீட்டும் ஆர்வம் குறைகிறதா என்றால் கொஞ்சம் கூட இல்லை. என்ன செய்வதுதயாரிப்பு கோளாறு என நினைக்கிறேன். அடுத்து என்ன செய்வது என தீவிரமாக யோசித்ததில் அண்ணன்(பெரியப்பா பையன்) நியாபகம் வந்தது அவனிடம் சென்று கடைக்காரர் பற்றி முறையிட்டேன், என்னை ஆறுதல் படுத்தி, என் காசில் ஒரு மணி நேர வாடகைக்கு ஒரு மிதிவண்டியைகொண்டு வந்து அவனே 50 நிமிடம் ஓட்டிவிட்டு 10 நிமிடம் எனக்கு பழகி கொடுப்பதாக சொல்லி பழைய கடுப்பில் இடுப்பிளையே குத்தி நேராக இருந்த இடுப்பை கோனாலக்கிவிட்டு நேராக்க சொல்லி மீண்டும் குத்துவான். மிதிவண்டியை மீட்டுவதில் உள்ள ஆர்வத்தில் இடுப்பில் நிறைய குத்து வாங்கி ஒரு வழியாக தனியாக மிதிவண்டி மீட்ட கற்றுக்கொண்டேன். மீண்டும் மிதிவண்டி கடை நோக்கி மிதி வண்டி மீட்ட கற்று கொண்ட கர்வத்துடன் சென்றேன். இம்முறை எனக்கு மிதிவண்டி மீட்டத்தேரியும் என்ற ரகசியத்தை கடைக்காரர் எப்படி அறிந்தார் என்பதும் எனக்கு தெரியாது ஒன்றும் பேசாமல் காசை வாங்கி கொண்டு மிதி வண்டியை எடுத்துகொண்டு போ என்றார். வாழ்கையில் முதல் முறையாக எனக்கே எனக்கான(ஒரு மணி நேரத்துக்கு மட்டும்) சிறிய மிதி வண்டியை தனியாக மீட்டியபோது வாழ்வில் வேறெதுவும் தேவை இல்லை என்ற உணர்வை மறுப்பதற்கு இல்லை. வாகனம் மீட்டுவது பற்றி கண்டிப்பாக நீட்டப்படும்.

புதன், 7 ஏப்ரல், 2010

விரும்பத்தக்க விரோதி..........!

இன்று சக ஊழியரின் இறப்பு செய்தி அறிந்து, அதிர்ந்து அதைப்பற்றி எழுத நினைத்ததின் விளைவாக தோன்றிய தலைப்புதான் விரும்பத்தக்க விரோதி. விரோதி யார் என பிறகு கூறுகிறேன், முதலில் இறந்தவர் பற்றி சில விஷயங்கள், அவர் பெயர் ஜான் ஆப்ரகாம் , ஆங்கிலேயர், திருமணமானவர்(எத்தனைமுறை என்பது தெரியாது), அனைவரிடமும் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர், முக்கியமான விஷயம் அவரது வயது 38 தான். நான் ஏன் அதிர்ந்தேன் என்பது தற்போது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். அவர் புகைபிடிப்பது இல்லை, குடிப்பது பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நன்றாக சாப்பிட கூடியவர்,பார்ப்பதற்கும் உருவம் பெருத்துதான் காணப்படுவார். முன்பே அவருக்கு உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். நேற்று இரவு மூளையில் இரத்தநாளம் வெடித்து இறந்து உள்ளார். அவரின் இறப்புக்கான காரணமாக நான் நினைத்த விரும்பத்தக்க விரோதி வேறு யாரும் அல்ல அதிகப்படியான அவரது உணவு பழக்க வழக்கம்தான். உடல் பெருத்த சக நண்பர்களுக்கு நான் உணவை குறைத்து உடற்பயிற்சி செய்ய சொல்வது உண்டு. அவர்களோ நான் குண்டாக முடியாத பொறாமையில் , அவர்களை ஒல்லியாக சொல்லுகிறேன் என நினைப்பார்கள் என நான் நினைக்கிறேன். இறுதியாக அதிகமாக உண்பவர் அனைவருக்கும் நோய் வருவது இல்லை. ஆனால் நோய் வந்த அனைவருமே அதிகம் சாப்பிடுபவர்களாகத்தான் உள்ளனர். புகை பிடிப்பவர் அனைவருக்குமே நுரையீரல் புற்று நோய் வருவது இல்லை ஆனால் புற்று நோய் வந்த அனைவருமே புகை பிடிப்பவராகவோ அல்லது புகை பிடிப்பவரின் கூட இருப்பவராகவே உள்ளார்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

சுறா....?

எத்தனை தமிழ் படம் எடுத்தாலும் திருந்த மாட்டானுக. சுறா புட்டை மன்னிக்கவும் பாட்டை கேட்ட உடனே தோன்றியது. இதில் விசையை குற்றம் சொல்வதா ஊக்குவித்த மக்களை குறை சொல்வதா என்பதே புரியவில்லை. அங்காடி தெரு போன்ற படங்களை ஊக்குவித்தாலே விசை,அசித், இன்னும் பலர் வழிக்கு வருவார்கள். ரசிகர்களும் என்ன செய்வார்கள் அவர்களுக்கு கௌரவ(..?) பிரச்சினை. அநேகமாக அனைவரும் மன நலம் பாதிக்க பட்டவர்களாக கூட இருக்ககூடும். பொழுது போக்காக மட்டுமே திரைப்படங்களை பார்க்கும் வழக்கம் இப்போது இல்லை. நடிகர்களுக்காகவே இப்போது திரைப்படங்கள் எடுக்க படுகின்றன ஆனால் பார்க்க படுகின்றனவா எனபது யோசிக்க படவேண்டிய விஷயம். கலாநிதி மாறனுக்கு பணத்தை வைத்துகொண்டு என்ன பண்ணுவது என புரியாமல் தமிழக மக்களை அனுமதி பெறாமலேயே கொடுமைபடுத்திகொண்டு இருக்கிறார். கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கு வதற்கு பல வழிகள் இருந்தாலும் அவர் திரைப்படங்கள் மூலம் மக்களை கொடுமைபடுத்துவதையே தேர்ந்தெடுத்துள்ளார் என நினைக்கிறேன். இதுவும் மறைமுக வன்முறையாகத்தான் பார்க்க வேண்டி உள்ளது. நீங்கள் நினைக்கலாம் படம்பார்க்க பிடிக்க வில்லை என்றால் பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே என்று. லேகியம் விற்ப்பவன் கூவி கூவி விர்ப்பதுபோல, படத்தில் பிழைத்துவிட்ட நாளே நாலு நல்ல காட்சிகளை திரும்ப திரும்ப போட்டு மக்களை குழப்பி திரைப்படங்களை பார்க்க வைப்பது வன்முறை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். அரசியல் அமைப்பு சட்டத்தில் நிறைய மாற்றம் கொண்டு வரவேண்டி உள்ளது.பொய் வாக்குறுதி குடுத்து, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளையும்,விளம்பரதாரர்களையும் தண்டிக்க புது சட்டம் கொண்டுவந்தாலும் தப்பு இல்லை. ஏன்னா இவனுக அலும்பு தாங்க முடியல...!

திங்கள், 5 ஏப்ரல், 2010

மர(னித)ம்

மனிதரில் மனிதம் தேடி, மரணித்து போகாமல், மரங்களிடையே மனிதத்தை வைத்து, மனித மனங்களை ஏனோ , மரமாக வைத்துவிட்டாயே என் இறைவா....? பின் குறிப்பு:மரங்களே மன்னித்து விடுங்கள் என்னை உங்களை மனித மனங்களுடன் ஒப்பிட்டதர்க்காக.

அகர முதல்ல.....

மனிதம் என்பதாகவே அறியபடாத என் சிறு வயது காலத்திலேயே மனிதம் என்னுள் நிறைய விதைக்க பட்டதை இப்போது அறியமுடிகிறது. முதல்விதை தாய் தந்தையிடம் இருந்தும் தொடர்ச்சியாக என்னுடைய எதிர் வீடு (குடும்ப எதிரியின் வீடு என்றும் சொல்லலாம்) ஆசிரியர் குடும்பம் . சாலமன் வாத்தியார் என எல்லாராலும் அறியப்பட்ட அவரை நான் தாத்தா என்றே அழைப்பது வழக்கம். அவருடைய மகள் வலி பேத்திகள் மூன்று பேர் அவர்களுடைய கடைசி தம்பியாகவே நான் பார்க்க பட்டேன்(நிறைய தின்பண்டம், காசு...தருவார்கள்). அவரிடம் ஆங்கிலத்திற்கான தனிப்பயிற்சியும் பயின்றேன். எனது அம்மாவிற்கும் தாத்தாவின் மகளுக்கும்(எனது இரண்டாம் வகுப்பு ஆசிரியர்) நிறைய கருத்து மோதல்கள் தெருவில் நடைபெறும். இதன் காரணமாக சாலமன் தாத்தாவுடனான எனது தனிப்பயிற்சி ஒரு போதும் பாதிக்க பட்டது இல்லை. சில நேரங்களில் முன்புறம் சண்டை நடந்துகொண்டு இருக்கும் பின்வழியே நான் சென்று எனது பயிற்சியை தொடர்வேன். ஒரு முறை கூட அவர்களின் கோபத்தை என்மேல் காட்டியதே இல்லை. ஒவ்வொரு முறை சண்டை நடைபெறும் போதும் என்மேல் உள்ள அன்பு கூடுமே தவிர குறையாது.சாலமன் தாத்தா மறைந்த பொது மயானத்தில் ஓரமாக இருந்த என் கரம் பற்றி கூட்டத்தை விலக்கிக்கொண்டு தாத்தாவின் முகத்தை நன்றாக ஒரு முறை பார்த்துகொல்லடா என்ற பொது அழுகையை அடக்கமுடியாமல் கண்ணீர் மறைத்த பிம்பமாய் என் ஆசிரியையின் முகத்தில் நான் கண்டது மனிதத்தை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்.....

மனிதம்....?

தலைப்பை பார்த்தவுடன் பெரிய அளவுல ஏதாவது சொல்லுடிவேன்னு பயப்பட வேண்டாம். ஏன்னா மனிதம் என்பதற்கான அர்த்தம் தெரியாத தலை முறை தோன்றி மிக நெடுங்காலம் ஆகிவிட்டது. சில பல நேரங்களில் பயங்கர கடுப்பா இருக்கு யுவர் ஹானர். பக்கத்து வீட்டுக்காரனுக்கு தானே நமகென்னணு நாம இருந்த மாதிரி பக்கத்து வீட்டுக்காரனும் இருக்கும் பொது, நமக்கு நம் சுயநலத்தின் கேவலமான அர்த்தம் விளங்கும் ஆனால் எந்த பயனும் இல்லை. காலம் கடந்து கிடைக்கும் தீர்வு எப்படியும் வீரியமற்றுத்தான் இருக்கும், விசாரனைகைதியாக 20 வருடம் இருந்து நிரபராதி என தீர்ப்பு வருவதை போன்றுதான் இருக்கும். புதிதாக எதையும் படிக்கதேவை இல்லை, பணம் கூட செலவழிக்க தேவை இல்லை, சிபாரிசு தேவை இல்லை...இவை எல்லாம் எதற்கு என யோசிப்பீர்களே, அதான் தலைப்பு ஒன்னு வச்சுருக்கேனே அதை பெறுவதற்குதான். மனிதம் மிகுந்த மனிதர்களை நிறைய சந்தித்து உள்ளேன் அவர்களை பற்றி நிறைய பேசுகிறேன் வரும் பதிவுகளில். வணக்கம்

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

இது எல்லாம் உங்க தலை எழுத்து

சுள்ளானுக்கான அறிமுகமாக என்ன சொல்லுறதுன்னு தெரியல என்ன இதுவரை சொல்லிக்கிறமாதிரி எதுவும் கிழிக்கலை(மானாட மயிலாட பாதிப்பாக கூட இருக்கலாம்). படிக்கிற உங்க மனசையாவது கொஞ்சம் கிழிக்கலாமுனு முடிவு பண்ணி களம் இறங்கி உள்ளேன் பார்க்கலாம் கிழிக்கிறேனா..? கிழிபடபோகிறேனா என்று. சுள்ளானுக்கு அடியில போடுறதுக்கு உதவி தலைப்பு தேடிட்டு இருக்கேன் கண்டு பிடிச்ச உடன போட்ருவோம். நல்ல ஒரு பதிவோட விரைவில் சந்திப்போம். நன்றி வணக்கம்