சனி, 10 ஏப்ரல், 2010

வாகனம் மீட்டுதல்......!

நடை பழகும் முன்பே எனக்கு வாகனம் மீட்ட தெரியும் என்றால் நீங்கள் சிரிக்க கூடும். இதற்கான பதிலை கேலியாக கூற வேண்டும் என்றால், தாயின் கருவறையில் வாகனம் ஓட்டுவதற்கான ஆயத்த பயிற்சிகளில் ஈடுபாட்டிருந்தேன் என கூறலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், நடை பழகுவர்க்காக நான் மீட்டிய மூன்று சக்கர மரவண்டியைத்தான் சொன்னேன்.இதில் இருந்தே அனைவருக்குமே வாகனம் மீட்டுவதில் உள்ள ஆர்வம் புரிந்து இருக்கும், எனக்கு கொஞ்சம் அதிகம் என நினைக்கிறேன். மரவண்டிக்கு பிறகு பனங்காய் வண்டியில் என் பயணம் தொடர்ந்தது. பிறகு மிதி வண்டியின் சக்கரத்தை கொண்டு ஊரில் உள்ள அத்தனை தெருவும் அளவெடுக்கப்பட்டன. கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்கு கயிறாக பயன்படுத்த , பெரிய வாகனங்களின் பழைய சக்கரங்கள் வார், வாராக வெட்டப்படும், இறுதியில் மிஞ்சும் உள் வளையத்தை, வெட்டுபவரிடம் கெஞ்சி அதை மீட்ட தொடங்கினேன், நண்பர்களையிடையே போட்டி கூட நடைபெறும் சில முறை வெற்றியும் பெற்றுள்ளேன், பரிசாக கிடைத்த கள்ளச்சை(கடலை அச்சு), மூன்று நாட்கள் கூட தின்னாமல் பார்த்து ரசித்து உள்ளேன்(சிலநேரம் காணாமலும் போய் விடுவது உண்டு யாரிடம் கேட்டாலும் எலி தின்றுவிட்டதாக ஒரே பதிலையே கூறுவார்கள் இதுவரை அந்த எலியை கண்டுபிடிக்க முடியவில்லை). எனக்கு என் அப்பாவை நிறைய பிடிக்கும்(அடிக்கும் போதும்,திட்டுபோதும் தவிர்த்த மற்ற நேரங்களில்மட்டும்), அவரை விட அவர் வைத்து இருந்த ஹெர்குலிஸ் மிதிவண்டியின் மீது பயங்கர ஆசை. அப்பா சொல்லாமலே அதற்கு எண்ணெய் விடுவது துடைப்பது என அதை சுற்றி சுற்றி வருவேன். மிதி வண்டியை நிறுத்தியில்(stand ) உள்ளபோது இயக்குவது ரொம்ப பிடிக்கும் பல முறை கீழே விழுந்து மிதி வண்டியிடமும்,அப்பாவிடமும் அடிவாங்கி உள்ளேன். கொஞ்சம் வளர்ந்ததும் மெதுவாக மிதி வண்டியை உருட்ட கற்று கொண்டேன். பிறகு கால் மிதியில்(பெடல்) நின்றுகொண்டு பயணம் செய்தேன். பிறகு எல்லோராலும் குரங்குபெடல்(குரங்கு எப்ப மிதி வண்டி ஒட்டிச்சுனு தெரியல)என்று அன்போடு அழைக்கப்படும் வித்தையை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு ஆனந்தமாக மிதிவண்டி மீட்டிகொண்டு இருந்தேன். மூன்றாவது நாளே விழுந்து தடை(பிரேக்)கம்பி கன்னத்தில் குத்தி வீரத்தளும்புடன் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் என் மேல் இருந்த பாசத்தின் காரணமாக மிதிவண்டியை தொடுவதற்கு மொத்த குடும்பமே ஒருமித்து(இதுல மட்டும் ரொம்ப ஒற்றுமையா இருப்பாய்ங்க) தடை விதித்தனர்.இது எனக்கு கன்னத்தில் கம்பி குத்தியதை விட வலித்தது. இருந்தாலும் என் வாகனம் மீட்டும் ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. சின்ன மிதி வண்டிகளை வாடகைக்கு குடுக்கும் கடைக்கு சென்றேன்(வீட்டில் சுட்ட காசோடுதான்) கடைக்காரருக்கு எனக்கு மிதி வண்டி ஒழுங்காக மீட்ட தெரியாது என்பது அவருக்கு எப்படி தெரியும் என்பது எனக்கு தெரியாது, மிதிவண்டி தரமுடியாது என விரட்டிவிட்டார் .விதியை நொந்தபடி வீடு வந்தேன். இவ்வளவு அவமானப்பட்டும்(.....?) இந்த வாகனம் மீட்டும் ஆர்வம் குறைகிறதா என்றால் கொஞ்சம் கூட இல்லை. என்ன செய்வதுதயாரிப்பு கோளாறு என நினைக்கிறேன். அடுத்து என்ன செய்வது என தீவிரமாக யோசித்ததில் அண்ணன்(பெரியப்பா பையன்) நியாபகம் வந்தது அவனிடம் சென்று கடைக்காரர் பற்றி முறையிட்டேன், என்னை ஆறுதல் படுத்தி, என் காசில் ஒரு மணி நேர வாடகைக்கு ஒரு மிதிவண்டியைகொண்டு வந்து அவனே 50 நிமிடம் ஓட்டிவிட்டு 10 நிமிடம் எனக்கு பழகி கொடுப்பதாக சொல்லி பழைய கடுப்பில் இடுப்பிளையே குத்தி நேராக இருந்த இடுப்பை கோனாலக்கிவிட்டு நேராக்க சொல்லி மீண்டும் குத்துவான். மிதிவண்டியை மீட்டுவதில் உள்ள ஆர்வத்தில் இடுப்பில் நிறைய குத்து வாங்கி ஒரு வழியாக தனியாக மிதிவண்டி மீட்ட கற்றுக்கொண்டேன். மீண்டும் மிதிவண்டி கடை நோக்கி மிதி வண்டி மீட்ட கற்று கொண்ட கர்வத்துடன் சென்றேன். இம்முறை எனக்கு மிதிவண்டி மீட்டத்தேரியும் என்ற ரகசியத்தை கடைக்காரர் எப்படி அறிந்தார் என்பதும் எனக்கு தெரியாது ஒன்றும் பேசாமல் காசை வாங்கி கொண்டு மிதி வண்டியை எடுத்துகொண்டு போ என்றார். வாழ்கையில் முதல் முறையாக எனக்கே எனக்கான(ஒரு மணி நேரத்துக்கு மட்டும்) சிறிய மிதி வண்டியை தனியாக மீட்டியபோது வாழ்வில் வேறெதுவும் தேவை இல்லை என்ற உணர்வை மறுப்பதற்கு இல்லை. வாகனம் மீட்டுவது பற்றி கண்டிப்பாக நீட்டப்படும்.

3 கருத்துகள்:

  1. சைக்கிள் ஓட்டுவதை பற்றிய நினைவுகளை மீட்ட பதிவு... வீணை மீட்டுவது சரி.... ஆமா அதென்ன வாகனம் மீட்டுவது.. இதென்ன உங்க சொந்த கண்டுபிடிப்பா இல்ல இலங்கை தமிழா???? ஆனா நீங்க சும்மா மிரட்றீங்க தோழரே...

    பதிலளிநீக்கு
  2. கடமையாக வாகனம் எல்லோரும் ஓட்ட முடியும், எனக்கு வாகனம் ஒட்டுதலில் உள்ள மிகுந்த ஈடுபாடை தனித்து காட்டவேண்டும் என்பதற்காக உருவாக்கியதுதான் வாகனம் மீட்டுதல் என்பது. தாங்களுக்கு புரிந்து இருக்கும் இருந்தாலும் சும்மா கிள்ளி பார்கிறீர்கள். விளக்கம் சரியானதுதானா..? (என்ன இலங்கையை வம்புக்கு இழுக்கிறீர்கள்..? நம்மை விட சில நேரங்களில் ஒழுங்கான தமிழ் கதைக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை.)

    பதிலளிநீக்கு
  3. ஒழுங்கான, அழகான தமிழாய் தோன்றியதால்தான் நான் இலங்கையை இழுத்தேன் என்பது உங்களுக்கும் தெரியும்.. நீங்க வண்டி ஓட்டும் முறையிலேயே உங்களின் ஈடுபாடு எனக்கு தெரியும்...

    பதிலளிநீக்கு