வியாழன், 15 ஏப்ரல், 2010
மழையோடு... மழையாகி........
காலையில் குளியலறையின் மேற்கூரை(தகரம்) மெதுவாக தடதடத்தது,அனிச்சையாக மேல் நோக்கினேன், கூரை ஓட்டை வழியாக மழை நீரின் முதல் துளி என் நெற்றியில் வந்தமர்ந்தது. அது மழைத்துளிதான் என்பதை அறியும் முன்பே அதன் தொடுதலை உணர்ந்தவனாக இருந்தேன்.மழையின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து தகரத்தின் தடதடப்பும்,சந்தோசத்தில் என் இதய துடி துடிப்பும் அதிகரித்தன.வாளியில் அள்ளி குளிப்பதா, இல்லை மழைநீரின் செயற்கை தண்ணீர் பூத்திவலையில்(தகரத்தில் ஓட்டை அதிகம்) நனைவதா என்ற குழப்பத்தின் ஊடே ஒருவழியா குளித்து சிறிது மழை நீருடன் அறைக்குள் வந்து உடை மாற்றிக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன்.வாகனத்தில் ஏறிய உடன் எனது பக்க கண்ணாடியை முழுவதுமாக இறக்கி விட்டேன். என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சக நண்பர் என்னை ஒரு மாதிரியாக இல்லை பல மாதிரியாகவும் பார்த்தார் காரணம் வெளியே மழை வேகமாக பெய்துகொண்டு இருந்தது. மழைத்துளி என்னையும், சாரல் அவரையும் நனைத்து கொண்டிருக்கும் போதே சீரான வேகத்தில் வாகனத்தை இயக்கதொடங்கினேன். மழை இல்லாத நேரங்களில் என் வாகனம் போகும் வேகம் நண்பருக்கு தெரியும் மழையின் காரணமாக நான் மேதுவாகசெல்வதாக அவர் நினைத்து கொண்டிருப்பார். உண்மையில் மழையின் மீது எனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக, மழையை ரசித்து அனுபவிக்கும் நோக்கில் மெதுவாக சென்று கொண்டிருந்தேன். வாகனத்தின் வேகத்திற்கு தகுந்தார்ப்போல் மழைத்துளி என்னையும், சாரல் நண்பரையும் நனைத்து கொண்டு இருந்தது.(என்னை வெட்டி தந்தாள் கூட சாப்பிடும் அளவு கடுப்பு நண்பரின் முகத்தில் தெரிந்தது). என்ன செய்வது சில நேரங்களில் சுய நலவாதியாகத்தான் உள்ளேன். வாகனம் முன்னோக்கியும் நினைவுகள் பின்னோக்கியும் பயனமாகத்தொடங்கின. சிறு வயதுகளில் எல்லோரையும் போல மழையில் நனைவதும் பின்விளைவுகலாக சளிப்பிடிப்பதும்,வீட்டில் வெளுப்பதும்(துணியை இல்லை என்னைத்தான்) நடை பெரும்.மழையை வேறொரு முகவரியில் எனக்கு அறிமுகம் செய்தவர் எங்கள் எல்லோராலும் செல்லமாக மாஸ்டர்(தட்டச்சு பயிலகம் வைத்து இருந்தார்) என்று அழைக்க பட்ட மன்னாதி மன்னன்(உண்மையான பெயர்தான்)ஆவார். இவரைப்பற்றி விளக்கமாக வேறொரு பதிவில் கூறுகிறேன்(ஏன்னா அவ்வளவு விஷயம் இருக்கு). சில காலம் அண்ணனின் இரும்பு பட்டறையில் வேலை செய்தேன். அண்ணனின் நண்பராக எனக்கு அறிமுகமானார்.எந்த விசயத்தையும் அவர் பார்க்கும் கோணத்தில் மற்றவர்கள் பார்க்காததால் எங்கள் எல்லோராளையும் ஒரு மாதிரியாகவே பார்க்கப்பட்டார். மழை காலங்களில் அவர் சில நேரம் மிதிவண்டியில் நனைந்து கொண்டே பட்டறையை கடந்து போவதை பார்த்தது உண்டு.ஒரு நாள் ஏதோ உந்துதலில் நானும் மிதிவண்டியை எடுத்துகொண்டு அவரை பின்தொடர்ந்தேன். நான் பின் தொடர்வதை உணர்ந்தவராக மிதி வண்டியின் வேகத்தை குறைத்து எனக்கு இணையாக பயணம் செய்தார்.ஏன் வந்தாய், எங்குபோகிறாய் எதுவும் அவர் கேட்கவில்லை, நான்தான் மெதுவாக மாஸ்டர் இந்த மழையில் எங்கு போகிறீர்கள் என வினவினேன். பதில் கூறாமல் சிறு புன்முறுவலுடன் தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமாக இருந்தார்.நல்லா சிக்கிட்டமோ என உள் மனது புலம்புவது வெளியவே கேட்கும் போல் இருந்தது காரணம் கடுமையான குளிர் காரணமாக கை,கால் என தனியாக கூற விரும்பவில்லை உடம்பில் அணு அளவும் மிச்சம் இல்லாமல் அனைத்துமே உதறிக்கொண்டு இருந்தது. மாஸ்டரை பார்த்தேன் என்னை விட கொஞ்சம் ஒல்லிதான் இருந்தாலும் குளிரின் பாதிப்பு எந்த கோணத்திலும் கண்டுபிடிக்க முடியாமல் தான் இருந்தது. அடக்க முடியாமல் மாஸ்டரிடம் மழையின் பாதிப்பு உங்களுக்கு மட்டும் ஏன் இல்லை என்றதற்கு அவர் சொன்ன பதில்தான் மழையோடு மழையாதல். நான் அவரை பார்த்த பார்வையை புரிந்தவராக இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் பதில் தருகிறேன் என்றுவிட்டு பயணத்தை தொடர்ந்தார். பேசாம திரும்பி விடலாமா என்று யோசித்த போதே உள் மனது குளிரின் ஆனந்தத்தை அனுபவிக்க பழகி கொண்டிருந்ததை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. மலை பிரதேசம் என்பதால் ஆங்காங்கே சிறிய, பெரிய பாறைகள் காணப்படும், மொட்டைப்பாறைகள் என்றும் அழைக்கப்படும் நல்ல ஒரு மொட்டை பாறையை தேர்ந்தெடுத்து மிதிவண்டியை ஓரமாக்கினார் கூடவே நானும் மிதிவண்டியை நிறுத்தினேன். நல்ல ஒரு மொட்டைப்பாறையில் இருவரும் அமர்ந்து கொண்டோம். ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இருக்கும் நான் நனைய ஆரம்பித்து தற்போது குளிரின் அளவு குறைந்து விட்டதை என்னால் நம்ப முடியவில்லை. மாஸ்டர் சொன்னார் எந்த ஒரு விசயமும் மனதுக்கு பிடித்து விட்டால் குறைகள் கண்ணுக்கு தெரியாது. மழையில் நனையாமல், மழையோடு மழையானால் அந்த ஏகாந்த பொழுதில் எதுவும் நம்மை பாதிக்காது என்றார். மாஸ்டர் சொன்னதை ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையைத்தான் அப்போது நான் பெற்று இருந்தேன்.அதாவது நானும் மழையோடு ..மழையாகித்தான் போனேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

மழையோடு மழையான நண்பரே... கவிதையான தலைப்போடு குழந்தைதனத்தையும் உணர முடிந்தது...
பதிலளிநீக்குகருத்துரைக்கு சந்தோசம் தோழரே. வாழ்வில் ஒவ்வொருவரும் அதிகமாக நினைத்து பார்ப்பதும், மாற நினைப்பதும் குழந்தை பருவமாகத்தான் இருக்கும். நான் மட்டும் என்ன விதிவிலக்கா ...?
பதிலளிநீக்கு